“சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு வெளியேறும் காலம் வந்துவிட்டது” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு வெளியேறும் காலம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இன்று (நவ.13) நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சத்தீஸ்கரில் அதன் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டது. டெல்லியில் உள்ள சில ஊடக நண்பர்களும், சில அரசியல் விமர்சகர்களும் என்னிடம், முதல்வர் பூபேஷ் பாகலே கூட தோற்கலாம் என்று கூறினர். காங்கிரஸ் கட்சிக்கு என் மீது வெறுப்பு. அதனால் என்னை அவதூறு செய்கிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அவதூறு செய்கின்றனர். நீதிமன்றம் அறிவுறுத்தியும்கூட அவர்கள் அந்த அவதூறுப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை.

இது ஒன்றே போதும் அவர்களுக்கு ஓபிசி சமூகத்தின் மீது எத்தனை வெறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்த. இதே காங்கிரஸ்தான் பாபா சாஹேப் அம்பேத்கரை இழிவுபடுத்தியது. இதே காங்கிரஸ்தான் அவரது அரசியல் பயணத்தை சதி செய்து முடித்தது. காங்கிரஸ் கட்சியால் வாக்கு வங்கி அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் சமரசம் செய்ய முடியும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 20 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கும் முங்கேலியில் பிரதமர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘‘எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார். அதை இந்த மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சுட்டிக் காட்டிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE