பிரதமர் மோடியின் சிறுதானிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த 'தி ரெக்கார்டிங் அகாடமி' சார்பில் ஆண்டுதோறும் கிராமி இசை விருதுகள் வழங்கப்படுகின்றன. இது உலகளவில் இசைத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். வரும் 2024-ம் ஆண்டுக்கான கிராமி விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிறந்த சர்வதேச பாடல் என்ற பிரிவின்கீழ் பிரதமர் மோடி சிறுதானியங்கள் குறித்து எழுதிய 'அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்' என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலை அமெரிக்கவாழ் இந்திய பாடகியான ஃபாலு என்ற ஃபால்குனி ஷா, அவரது கணவர் கவுரவ் ஷா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். கிராமி இசை விருது வரலாற்றில் முதல்முறையாக ஓர் அரசியல் தலைவரின் பாடல் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெருமையை மோடி பெற்றுள்ளார். சிறுதானிய பாடலை பாடிய ஃபால்குனி ஷா கூறியதாவது:

கடந்த 2022-ல் கிராமி விருதை வென்றதற்காக பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றபோது அவர் எழுதிய சிறுதானியம் குறித்த பாடலுக்கு இசை அமைக்குமாறு கோரினார். இசை மூலம் சிறுதானியத்தின் நன்மையை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டார். இதன்படி இசை அமைத்து கடந்த ஜூனில் வெளியிட்டோம். அந்த பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

மோடி பன்முகத்தன்மை கொண்டவர். அவர் எழுதிய கவிதைகள் குஜராத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது. ஆங்கிலத்திலும் தமிழில், ‘சிந்தனை களஞ்சியம்' என்ற பெயரிலும் வெளியானது. இந்த வரிசையில் சிறுதானியங்கள் குறித்த அவரது கவிதை கிராமி விருது வரை சென்றிருக்கிறது.

கிராமி விருதுக்கான பரிந்துரையில் அவ்வளவு எளிதாக இடம் பிடிக்க முடியாது. இசைத் துறையை சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாடல்களை முன்மொழிவார்கள். ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 7 பாடல்கள் வரை பரிந்துரை செய்யப்படும். இறுதியில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும். பிரதமர் மோடியின் பாடல் இடம்பெற்றிருக்கும் சிறந்த சர்வதேச பாடல் பிரிவில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. <வீடியோ லிங்க்>

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE