விதிமுறைகளை மீறுவது மாநில அரசுதான்; அரசியல் சாசனப்படி நான் செயல்படுகிறேன்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பதில்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: ‘‘விதிமுறைகளை மீறியது கேரள அரசு தான். நான் அரசியல் சாசனப்படிதான் செயல்படுகிறேன்’’ என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பதில் அளித்துள்ளார்.

மசோதாக்களை மாநில ஆளுநர்கள் கிடப்பில் போடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழகம், கேரளா, பஞ்சாப், தெலங்கான உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன. தமிழகம் மற்றும் பஞ்சாப் அரசின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடுவது கவலைக்குரியது என கருத்து தெரிவித்தது. சட்டமன்றத்தின் முடிவுகளை சந்தேகிக்கும் முயற்சி ஜனநாயகத்துக்கு ஆபத்து என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மாநில அரசுதான் பல முறை விதிகளை மீறியிருக்கின்றன. நான் அரசியல்சானப்படிதான் செயல்படுகிறேன். நான் விதிகளை மீறினே் என்பதற்க ஒரு உதாரணத்தை காட்ட முடியுமா? கேரள அரசு எத்தனை முறை விதிகளை மீறியிருக்கிறது என்பதற்கு பெரிய பட்டியலே உள்ளது. பிரச்சினையை ஏற்படுத்துவது யார்? ஓய்வூதியம், சம்பளம் போன்றவற்றை முறையாக வழங்காத கேரள அரசு, கேரளீயம் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவழித்து ஆடம்பரமாக கொண்டாடுகிறது.

சட்டப்பேரவையை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு பதிலாக வேறு விஷயங்களுக்கு கேரள அரசு பயன்படுத்துகிறது. நான் அரசியல்சாசனப்படிதான் எனது கடமையை செய்கிறேன். ஆளுநரின் முன் அனுமதி இல்லாமல் நிதி மசோதாக்களை நிறைவேற்ற முடியாது.

பல்கலைக்கழக மசோதாக்கள் நிதி மசோதாக்கள். அதை ஆளுநர் அனுமதி இல்லாமல் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE