“பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை ராமர் கோயில் வலுப்படுத்தும்” - யோகி ஆதித்யநாத்

By செய்திப்பிரிவு

அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக நிறுவப்பட்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தற்போது அமைய உள்ள ராமர் கோயில் வலுப்படுத்தும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளைக் கொண்டு தீபம் ஏற்றும் நிகழ்வான தீபோற்சவம் இன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யாநாத் இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “அயோத்தியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு தீபோற்சவம் தொடங்கப்பட்டபோது அனைவருக்கும் ஒரே ஒரு பிரார்த்தனைதான் இருந்தது. அது, அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் பிரம்மாண்டமான முறையில் அமைய வேண்டும் என்பதே. அந்த பிரார்த்தனை தற்போது நிறைவேறி வருகிறது. அயோத்தி ராமர் கோயிலின் பிராணபிரதிஷ்டை விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்கிறார்.

7 ஆண்டுகளுக்கு முன்பு, தீபோற்வசம் தொடங்கப்பட்டபோது சுற்றிலும் ஒரே குழப்பமான நிலை காணப்பட்டது. ஆனால், இன்று இந்த தீபோற்வசம் நிகழ்வு தனித்துவமான ஒன்றாகி இருக்கிறது. இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இது ஒரு தனித்துவமான நிகழ்வு. பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக நிறுவப்பட்டுள்ள ராம ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தற்போது அமைய உள்ள ராமர் கோயில் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தீபோற்வசத்தை முன்னிட்டு அயோத்தியில் ராஜ அபிஷேகம் நடைபெற்றது. ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் வேடம் தரித்த கலைஞர்களுக்கு, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், மலர் மாலை அணிவித்து அவர்களை வணங்கினார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE