‘காங்கிரஸின் குணமே ஊழல் நிறைந்தது’ - பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்கு பாஜக பதிலடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “காங்கிரஸ் கட்சியின் சொந்த குணாதிசயமே ஊழல் நிறைந்தது” என்று பாஜக விமர்சித்துள்ளது. பிரதமரின் குணாதிசயம் குறித்த ஜெய்ராம் ரமேஷின் பேச்சுக்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரங்களின்போது, நக்சல் தீவிரவாதத்தின் மீது அனுதாபம் கொண்ட காங்கிரஸ், ஊழலை மன்னிக்கும் கட்சி என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை பேசியிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமரை கடுமையாக தாக்கியிருந்தார். அவர் கூறும்போது, "பொய் சொல்வதே பிரதமரின் குணம். தேர்தல் நேரங்களில் அவர் சிறப்பாக பொய்களை கூறுவார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே இதனைச் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அடுத்தடுத்து தொடர்ந்து அவர் பொய் சொல்லி வருகிறார் நேற்று சொன்னதைப் போலவே" என்று அவர் தெரிவித்தார்.

ஜெய்ராம் ரமேஷின் இந்தப் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி பதிலடி கொடுத்துள்ளார், அவர், "காங்கிரஸ் கட்சி எப்போது ஒருவரின் குணம் பற்றி சான்றிதழ் கொடுக்கத் தொடங்கியது. காங்கிரஸின் சொந்த குணமே ஊழல், வகுப்புவாதம், குழப்பம் நிறைந்தது" என்று சாடியுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலாங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஐந்து மாநிலங்களில் வடகிழக்கு மாநிலமான மிசோரம், சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவைரளுக்கும் நவ.17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்கும், 30-ம் தேதி தெலங்கானா மாநிலத்துக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE