ராஜஸ்தானில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: காவல் உதவி ஆய்வாளர் கைது

By செய்திப்பிரிவு

தவுஸா: ராஜஸ்தானின் தவுஸா மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவுஸா மாவட்டத்தின் லால்ஸாட் மாவட்டத்தில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. புபேந்திர சிங் என்ற நபர் குழந்தையை ஏமாற்றி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. உள்ளூர்வாசிகளின் தகவலின் பேரில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் ராம்சந்திர சிங் நெஹ்ரா கூறுகையில், "கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் புபேந்திர சிங்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும். விரைவில் அவர் காவல் துறை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார். கூடவே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காவல் துறை உறுதுணையாக இருக்கும்" என்றார்.

இதற்கிடையில், ரஹுவாஸ் காவல் நிலையத்தை உள்ளூர்வாசிகள் முற்றுகையிட்டனர். காவல் துறைக்கு எதிராகக் கண்டனக் குரல்களையும் அவர்கள் எழுப்பினர். சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை போலீஸிடம் ஒப்படைக்கும் முன்னர் அவரை உள்ளூர்வாசிகள் அடித்துக் காயப்படுத்தியாகத் தெரிகிறது. மக்கள் ஆவேசத்துடன் இருப்பதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா கூறுகையில், "சம்பவ இடத்தில் உள்ளூர் மக்கள் கோப ஆவேசத்துடன் குவிந்துள்ளனர். பட்டியலின குழந்தைக்கு நேர்ந்த இந்த அவலுத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் சம்பவ இடத்துக்கு வந்துள்ளேன். அசோக் கெலாட் காங்கிரஸ் அரசின் திறன் இன்மையால் தான் போலீஸார் சர்வாதிகாரிகள் ஆகிவிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாஜக இழப்பீடு தரும்" என்றார்.

ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE