“நாட்டின் கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதிக்கிறது காங்கிரஸ்” - அமித் ஷா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மணாவர் (மத்தியப் பிரதேசம்): நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் மணாவர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கு இம்முறை 3 தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது. நாளைய தினம் நாட்காட்டிப் படியான தீபாவளியை நீங்கள் கொண்டாடுவீர்கள். இரண்டாவது தீபாவளி, மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் நாளான டிசம்பர் 3-ம் தேதி. பாஜகவின் வெற்றி அன்று உறுதியாகும் என்பதால், அந்த தினமும் மத்தியப் பிரதேச மக்களுக்கு தீபாவளித் திருநாளாக இருக்கும். மூன்றாவது, தீபாவளி... அயோத்தியில் ராமர் தனது ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நாளான ஜனவரி 22-ம் தேதி. அதுவும் தீபாவளிக்குரிய கொண்டாட்ட தினமாக நிச்சயம் இருக்கும். எனவே, இம்முறை உங்களுக்கு 3 தீபாவளி காத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சி காலம் காலமாக நமது கலாச்சாரத்தை அவமதித்து வருகிறது. ஒருபுறம், நமது நாட்டின் கலாச்சார அடையாளங்களைப் புதுப்பிக்கும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். மறுபுறம், அதனை எதிர்க்கும் செயலை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ராஜா போஜ் பெயரை வைக்க பாஜக அரசு முடிவு செய்தபோது, அதனை காங்கிரஸ் எதிர்த்தது. சாகரில் மகான் ரவிதாஸுக்கு கோயில் கட்ட பாஜக முயன்றபோது, அதனையும் காங்கிரஸ் எதிர்த்தது. இதன்மூலம், இந்தியாவின் கலாச்சாரத்தை எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது" என்று அமித் ஷா பேசினார்.

சத்தீஸ்கரின் சுர்குஜா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஜவஹர்லால் நேரு, அடல் பிஹாரி வாஜ்பாய், இப்போது பிரதமர் மோடி என எல்லோருக்கும் புதிய சத்தீஸ்கரை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. பிரதமர் மோடி வந்த இரண்டே ஆண்டுகளில் பாஜக தலைமையிலான ரமன் சிங் அரசு இல்லாமல் போனது. அதனால்தான் புதிய சத்தீஸ்கரை உருவாக்கும் பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்தது, பூபேஷ் பாகேல் முதல்வரானார். அவர் முதல்வரான பிறகு, என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். இந்த ஊழல் அரசு போய் பாஜக வர வேண்டும்" என தெரிவித்தார். இதனிடையே, பாஜக ஆளாத மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு பாஜக கட்டுப்படுத்துகிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் குற்றம் சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE