கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் தேர்வு - ‘வாரிசு அரசியல்’ என காங்கிரஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக பாஜக தலைவராக தனது மகன் விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு அம்மாநில முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தான் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில், இதனை வாரிசு அரசியல் என்று கர்நாடகா காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், “மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் இந்த முடிவினை எடுப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காக வேலை செய்ய அவர்கள் விஜயேந்திராவை அனுமதித்திருக்கிறார்கள். எங்களுடைய ஒரே நோக்கம், வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் குறைந்தது 25 இடங்களைக் கைப்பற்றுவதே. அதற்காக விஜயேந்திரா அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நாங்கள் கடினமாக உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகா பாஜக தலைவராக விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்டதற்கு, மாநிலத்தில் பாஜக கூட்டணிக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இதனை ‘வாரிசு அரசியல்’ என்று கர்நாடகா காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மாநில காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில், “எடியூரப்பாவின் மகன் என்ற தகுதியின் அடிப்படையில் மாநில பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடியூரப்பாவின் மகனுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளது.

47 வயதாகும் விஜயேந்திரா, சிவமோக்கா மாவட்டத்தின் ஷிகாரிபுரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கிறார். இவர் தனது மூன்றாண்டு பாஜக தலைவர் பதவியை நிறைவு செய்திருக்கும் நலின் குமார் கடீலுக்கு பின்னர் பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தக்‌ஷிண கன்னடாவிலிருந்து மூன்று முறை மக்களவைத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலனுக்கு, கர்நாடகா பேரவைத் தேர்தலின்போது பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE