“பாஜக ஆளாத மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்துகிறது மத்திய அரசு” - சத்தீஸ்கர் முதல்வர்

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: பாஜக ஆளாத மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு பாஜக கட்டுப்படுத்துகிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் குற்றம் சாட்டியுள்ளார்.

ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பெகல், "பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நிலங்கள் விற்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால், அவற்றை விற்பனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விற்பனைப் பட்டியலில் இருந்து அந்த நிலங்கள் நீக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், மத்திய பாஜக அரசு அதனை செய்யவில்லை. அவர்களின் வார்த்தைகளை நம்பக் கூடாது என்பதை சத்தீஸ்கர் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அதேபோல், பழங்குடி இன தலைவர் விஷ்ணுதேவ் சாய், உலக பழங்குடியினர் தினத்தன்று பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பழங்குடி மக்களுக்கு இதைவிட பெரிய அவமானம் வேறு என்ன இருக்க முடியும்? இதன் பின்னணியில் இருந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். மாநில பாஜக தலைவர்களின் அகங்காரம் வெளிப்பட்டு வருவதால், தற்போது பாஜக வெளியில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கமிஷன் ஏஜெண்டுகளுக்கு மீண்டும் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் மாநில மக்கள் உறுதியாக உள்ளனர்.

மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எந்தெந்த மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இல்லையோ, அங்கெல்லாம் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த மத்திய பாஜக முயல்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE