‘நெருக்கடியை உருவாக்குவது யார்?’ - வலுக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கேள்வி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கு எதிரான அமளி வலுத்து வரும் நிலையில், மாநில அரசு பல சமயங்களில் எல்லையை மீறியதாக கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் தெரிவித்துள்ளார். மேலும் தான் எப்போதாவது நெருக்கடியை உருவாக்கி உள்ளேனா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சில மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது தொடர்பாகவும், மசோதாக்களை காலவரையின்றி தாமதப்படுத்துவது தொடர்பாகவும் ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்தநிலையில் ஆளுநர் ஆரிஃப் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள ஆளுநர் வெள்ளிக்கிழமை கூறுகையில், "நான் என்னுடைய எல்லையை மீறி செயல்பட்ட ஒரு உதாரணத்தைக் காட்டுங்கள். என்னுடைய மாநில அரசு எவ்வளவு முறை அதன் எல்லையைத் தாண்டி இருக்கிறது என்பதற்கு நீண்ட பட்டியலே உண்டு. அதனால் நெருக்கடியை உருவாக்குவது யார்? என நீங்களே சொல்லுங்கள். கேரள அரசு நீண்ட காலமாக சம்பளமும், ஓய்வூதியமும் வழங்கவில்லை. ஆனால் நாங்கள் பெரிய கொண்டாட்டத்தைக் (கேரளீயம்) கொண்டிருக்கிறோம். 1 மில்லியன் செலவில் பெரிய நீச்சல் குளத்தை உருவாக்குவோம்.

நான் எப்போதும் அரசியலமைப்பின்படிதான் செயல்படுகிறேன். எனது பணி நிராகரிக்கப்படும்போது நான் அரசியலமைப்பு ஷரத்துக்களையே பின்பற்றுகிறேன். பல்கலை மசோதா என்பது பண மசோதா; பண மசோதா ஆளுநரின் முன் அனுமதி இல்லாமல் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியாது" இவ்வாறு கான் தெரிவித்தார்.

இந்தநிலையில், நவ.8-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் என்பவர் அரசியலமைப்பின் படி செயல்படவேண்டியவர் என்று கூறியிருந்தார். முன்னதாக, ஆளுநர் ஆரிஃப் கான், அரசு சட்டப்பேரவையை எதற்காக பயன்படுத்துகிறது என்பதைத் தாண்டி மற்றவைகளுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் ஆளுநர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையில் மோதல் வலுத்தது. கேரளா தவிர தமிழகம், தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது, "ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் ஆன்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு வழக்குகள் வரும்போது மட்டுமே ஆளுநர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE