சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது: தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்குதொடரப்பட்டது. ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர்விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹ்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி கூறும்போது, “நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்க மறுக்கும் நிலை அதிகரித்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது ஒரு தொற்று நோய்போல பரவியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை சுமார்3 ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில்போட்டிருக்கிறார்’’ என்றார்.

வழக்கறிஞர் வில்சன் கூறும்போது, “சுகாதாரம், உயர் கல்வி தொடர்பான மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இந்த மசோதாக்கள் குறித்து அவர் எந்தபதிலும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் உள்ளிட்ட 10 பதவிகள் காலியாக உள்ளன. பல முறை கோரியும் அந்த கோப்பை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து, தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன்படி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம். அந்த மசோதா நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட முடியாது.

நவ.20-ல் விசாரணை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது. தமிழக அரசின் மனு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை நவ.20-ல் நடைபெறும். அன்றுமத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டு கிடப்பில் உள்ள மசோதாக்கள், அரசாணைகளை உச்ச நீதிமன்றம்3 வகைகளாக பிரித்துள்ளது.

வரும் 20-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, இந்த 3 வகைகளில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மசோதாக்கள், கோப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

‘நெருப்போடு விளையாட கூடாது’ என கண்டிப்பு: பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்க மறுப்பதாக அந்த மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பஞ்சாப் அரசு, ஆளுநர் தரப்பு, மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, தலைமை நீதிபதி அமர்வு முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் செல்லாது. அந்த சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று ஆளுநர் கூறுவது ஏற்புடையது அல்ல. இது மிகவும் கவலைக்குரியது. நெருப்போடு விளையாட கூடாது. கிடப்பில் போடப்பட்டிருக்கும் மசோதாக்கள் குறித்து பஞ்சாப் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்