‘என் மண்.. என் தேசம்’ பிரச்சாரத்தின்போது இந்தியாவில் அதிக செல்பிகள் பதிவு செய்யப்பட்டதாக கின்னஸ் சாதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: என் மண் என் தேசம் பிரச்சாரத்தின்போது அதிக செல்பிகள் எடுத்து இணையத்தில் பதிவு செய்து உலக சாதனை படைத்ததாக இந்தியாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. என் மண் என் தேசம் பிரச்சார நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலேபல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாங்கள் கொண்டு வந்த மண் கலசங்களுடன் 10,42,538 பேர் செல்போனில் செல்பி எடுத்து பதிவு செய்தனர். இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சீனாவில் 2016-ம் ஆண்டு ஒரு லட்சம் பேர் செல்பி எடுத்து இணையத்தில் பதிவு செய்ததே சாதனையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:

என் மண் என் தேசம் நிகழ்ச்சியின்போது மொத்தம் 25 லட்சம் பேர் செல்பிக்கள் எடுத்து பதிவு செய்தனர். ஆனால் கின்னஸ் சாதனை புத்தக அமைப்பாளர்கள் 10,42,538 செல்பிக்களை மட்டுமேபதிவு செய்து சான்றிதழை வழங்கியுள்ளனர்.

இருந்தபோதும் நாம் சீனாவை வென்றுவிட்டோம். இந்தச் சாதனையை மகாராஷ்டிராவின் சத்ரபதி சிவாஜி மகராஜ்தான் செய்தார். இதுபோன்று பல சாதனைகளை நாம் முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, “இந்தப் பிரச்சாரம் வெற்றி பெற பாடுபட்டஅனைவரையும் நான் வாழ்த்துகிறேன். நமது தேச ஒற்றுமையையும், தேசப்பற்றையும் இந் நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. எப்போதுமே மகாராஷ்டிர மாநிலம், தேசத்துக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இதை நாம்பலமுறை பார்த்துள்ளோம். இதுபிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால்தான் நடைபெறுகிறது. அவருடைய சீரிய முயற்சியால்தான், நம் நாட்டின் பெயர் உலக அளவில் போற்றப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE