“வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்பதில் என்ன தவறு?” - காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “வாரத்துக்கு 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதில் என்ன தவறு உள்ளது?” என காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

"இந்தியா வேகமாக முன்னேற வேண்டுமானால் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும்” என இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சில தினங்களுக்கு முன் கூறி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மணிஷ் திவாரி, “வாரத்துக்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு? அவர் கூறியதில் என்ன தவறு?

பொது வாழ்க்கையில் இருக்கும் என்னைப் போன்ற பலரும் ஒரு நாளைக்கு 12 முதல் 15 மணி நேரம் பணியாற்றுகிறோம். ஞாயிறு உள்பட 7 நாட்களும் இவ்வாறு வேலை பார்க்கிறோம். இத்தகைய கடும் பணிகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துகிறோம். நான் கடைசியாக எப்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களும் முழு வேலை நாட்கள்தான்.

இந்தியா உண்மையிலேயே ஒரு பெரிய சக்தியாக மாற வேண்டுமானால், ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் வாரத்திற்கு 70 மணிநேரத்தை தங்கள் பணி நெறிமுறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். வாரத்தில் 70 மணிநேரம் பணி, ஒரு நாள் விடுமுறை, வருடத்தில் 15 நாட்கள் சுற்றுலா செல்வதற்கான விடுமுறை என்பதை நாம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE