தெலங்கானாவில் வெற்றி பெற்றால் 6 மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானாவில் சிறுபான்மையினர் நலனுக்கான பட்ஜெட் தொகை ரூ.4,000 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும் என்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதும் ஆறு மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் இந்தமாதம் கடைசியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு தேசிய, பிரந்திய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை சிறுபான்மையினர் பிரகடனத்தை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையினர் உட்பட அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசு திட்டங்களில் நியாயமான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். மேலும் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1,000 வழங்கப்படும்.

அப்துல் கலாம் தவுஃபா இ தலீம் திட்டத்தின் கீழ் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற சிறுபான்மையினர் இளைஞர்களுக்கு அவர்கள் எம்பில், பிஹெச்டி படித்து முடித்ததும் ரூ.5 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும். இமாம்கள், காதீம்கள், பாதிரியார்கள் மற்றும் கிரந்திஸ்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த மத போதகர்களுக்கும் ரூ.10,000 - 12,000 வரை கவுரவ ஊதியம் வழங்கப்படும்.

சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கை மூலமாக உருது மொழிப்பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தவிர தெலங்கானா சீக்கிய சிறுபான்மை நிதி கழகம் தொடங்கப்படும். வீடில்லாத சிறுபான்மையிருக்கு வீடுகட்டிக்கொள்வதற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். அதேபோல் புதிதாக திருமணம் செய்துகொண்ட ரூ.1.6 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE