டெல்லியில் மழை: மாசு நீங்கி காற்றின் தரம் சற்றே உயர்ந்தது; மக்கள் நிம்மதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஆங்காங்கே மழை பெய்ததால் அங்கு காற்று மாசுபாட்டின் அளவு சற்றே குறைந்துள்ளது. இதனால் இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 408 என்ற அளவில் இருந்தது. நேற்று மாலை இதுவே 437 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றின் தரக் குறியீடு 0 - 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 - 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம். காற்றுமாசு தீவிரமாக உள்ள நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது தீபாவளிக்கு முன்னர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கணிசமாக முன்னேறும் என்று கணித்துள்ளது. பரவலான மழைக்கு மிதமான வாய்ப்பிருப்பதாகவும் கூறியது.
மேலும், வடமேற்கில் இருந்து தென் கிழக்கு நோக்கி காற்றின் திசை மாறுவதாலும், புதிதாக மேற்கில் ஏற்பட்டுள்ள கலக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் பயிரிக் கழிவு எரிப்பால் ஏற்பட்டுள்ள புகை கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பிராந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இன்று (நவ.10), டெல்லி, சோஹானா, ரேவாரி, அவுரங்காபாத், ஹோடால் (ஹரியாணா). பீஜ்நாவுர், சகோடி, மீரட், டண்டா,ஹஸ்தினாபுர், சந்த்பூர், தவுராலா, மோடிநகர், கிதோர், அம்ரோஹா ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் , அதிகரித்து வரும் மாசுபாட்டைச் சமாளிக்க தேசிய தலைநகரில் செயற்கை மழையைத் தூண்ட முயற்சிப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். நவ 20, 21 தேதிகளில் இதற்காக திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இப்போதைய மழை ஆறுதலாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE