கல்வி, அரசு வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு பிஹார் சட்டப்பேரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பாட்னா: அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் தற்போதுள்ள 50 சதவீத ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா பிஹார் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

பிஹார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். 1931-ம் ஆண்டுக்கு பிறகு பிஹாரில் தற்போதுதான் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை கடந்த அக்.2-ம் தேதிவெளியானது.

இதில் பிஹார் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 64 சதவீதம் பேர் இருப்பது தெரியவந்தது. இந்த அறிக்கை பிஹார் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பிஹார் மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களது மாதவருமானம் ரூ.6,000-க்கும் கீழ் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய முதல்வர் நிதிஷ் குமார், ‘‘சாதிவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, இடஒதுக்கீட்டை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்று கூறியிருந்தார். இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு பிஹார் அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புமற்றும் கல்வி நிறுவனங்களில் தற்போதுஉள்ள இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா பிஹார் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான(ஓபிசி) இடஒதுக்கீடு 18 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (இபிசி) இடஒதுக்கீடு 25 சதவீதம், எஸ்.சி. பிரிவினருக்கான ஒதுக்கீடு 20 சதவீதம், எஸ்.டி.பிரிவுக்கான இட ஒதுக்கீடு 2 சதவீதம் ஆகும். இதுதவிர, மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் அமலில் உள்ளது. இதன் மூலம் பிஹாரில் மொத்த இடஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் கூறும்போது, ‘‘அனைத்து உண்மை விவரங்களையும் வெளிக்கொண்டு வரும் வகையில் விரிவான பணியை பிஹார் அரசு செய்துள்ளது. இடஒதுக்கீட்டை அதிகரித்ததன் மூலம் மக்கள்தொகையில் அதிகம் உள்ள ஓபிசி, இபிசி பிரிவினருக்கு அதிக இடங்கள் கிடைக்கும்’’ என்றார்.

இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவுக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. ‘‘இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சிக்கு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்’’ என்று மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்திரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்