தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 44 பேர் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் ஊடுருவச் செய்வதும் இவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவ்வாறு ஆட்கடத்தலில் ஈடுபடும் 5 கும்பல்களுக்கு எதிராக என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹரியாணா, மேற்கு வங்கம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்முகாஷ்மீர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்தம்55 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்தந்த மாநில போலீஸார் இந்த சோதனைக்கு உதவினர்.

திரிபுராவில் 21 பேர் கைது: இந்த சோதனையில் 4 கும்பல்களை சேர்ந்த 44 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கடுத்து கர்நாடகாவில் 10, அசாமில் 5, மேற்கு வங்கத்தில் 3, தமிழ்நாட்டில் 2, புதுச்சேரி, தெலங்கானா, ஹரியாணா ஆகியவற்றில் தலா 1 என 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள், போலி ஆதார் மற்றும் போலி பான் அட்டைகள்,ரூ.20 லட்சம் ரொக்கம், 4,550அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அசாம் காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதன்முதலாக வழக்கு பதிவு செய்தது. அதன் விசாரணையில், இந்த வழக்கில் நாடு முழுவதும் மட்டுமின்றி சர்வதேச தொடர்புகளும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கடந்த அக்டோபர் 6-ம் தேதி என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ விசாரணையில் வெவ்வேறு கும்பல்கள் செயல்படுவது தெரியவந்ததால் மேலும் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அதற்கு ஆதரவான வலையமைப்பை தகர்ப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ நேற்று முன்தினம் தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE