“நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது” - ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவையில் பெண் கல்வி குறித்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ஆண் - பெண் சேர்க்கை குறித்து அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் மாநில பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தான் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நிதிஷ் குமாரின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. தனது அந்த பேச்சுக்காக சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்பது எனது தனிப்பட்டக் கருத்து" என்று கூறியுள்ளார்.

நிதிஷ் குமாரின் பேச்சுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது வெட்கக்கேடான கருத்து. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மூத்த நபர் ஒருவர், அதுவும் முதல்வர், சட்டப்பேரவையில் கல்வியோடு பெண்களைப் பற்றி தகாத வார்த்தைகளால் பேசுவது மிகவும் வெட்கக்கேடானது. இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் இதை கடுமையாக கண்டித்திருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தியா குமாரி, "அவர் அவ்வாறு பேசியது வெட்ககரமானது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் அமைதியாக இருக்கிறார்கள். இதற்கு எதிராக ஒரு கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இதன் மூலம், அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை ஏற்கிறார்கள் என்றே அர்த்தமாகும்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE