உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூவர் தேர்வு - மீண்டும் கிடைத்த முழு பலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை நீதிபதி உள்பட 34 நீதிபதிகளைக் கொண்டது உச்ச நீதிமன்றம். எனினும், கடந்த சில மாதங்களாக 3 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, காலி பணியிடங்களை நிரப்பும் நோக்கில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் புதிய நீதிபதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சத்திஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ், கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை, உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு கடந்த 6-ம் தேதி பரிந்துரை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

இதையடுத்து, மூவரும் இன்று மாலை பதவி ஏற்க உள்ளனர். இவர்கள் பதவி ஏற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் மீண்டும் தனது முழு பலத்தைப் பெறும். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் முழு பலத்துடன் இருந்தது. அப்போது, காலியாக இருந்த இரண்டு நீதிபதி பணியிடங்கள் நீதிபதிகள் ராஜேஷ் பின்டால், அரவிந்த் குமார் ஆகியோரைக் கொண்டு நிரப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE