“நோயுற்ற நிலையில் இருந்த ம.பி.யை மீட்டு சிறப்பாக மாற்றியது பாஜகதான்” - நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

போபால்: பாஜக தலைமையிலான நல்லாட்சியால்தான் நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் தற்போது சிறப்பான நிலைமைக்கு மாறியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்கச் சூறாவளி பிரசாரத்தில் இறங்கியுள்ளது, மத்தியப் பிரதேசத்தில் வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “5ஜி-யில் முன்னேற்றம், பாஜகவின் நல்லாட்சி, மக்களின் நல்லெண்ணம், பிரதமர் மோடியின் உத்தரவாதமாக்கும் பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டம் போன்ற நல்ல முன்னெடுப்புகளால்தான் இந்த மாநிலம் வளர்ச்சியை அடைந்துள்ளது.

5ஜி-யின் காரணமாக bimaru (sick) நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த மத்தியப் பிரதேசம் தற்போது சிறப்பான bemisal (extraordinary) நிலைமைக்கு மாறியுள்ளது. சட்டசபைத் தேர்தலில் பாஜக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெறும். சமூக நீதி, தொழில் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது” என்றார். அதைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் பேசிய அவர், மத்தியப் பிரதேசத்தில் மக்களின் ஆண்டு தனிநபர் வருமானம் தற்போது ரூ. 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துக்கான கடன் 2002-ல் 31.6 சதவீதத்திலிருந்து 2023-ல் 21.7 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE