தெலங்கானா தேர்தல் | காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் வேட்புமனு தாக்கல்

By செய்திப்பிரிவு

காஜ்வெல்(தெலங்கானா): தெலங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து அதன் முதல்வராக இருக்கும் கே. சந்திரசேகர ராவ் (கேசிஆர்), வழக்கம்போல் இம்முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்ற காஜ்வெல் தொகுதியில் மூன்றாவது முறையாக கேசிஆர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 19,391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காஜ்வெல் தொகுதியில் கேசிஆர் போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அதே பிரதாப் ரெட்டி அவரை எதிர்கொண்டார். அப்போது, கேசிஆர் 58, 290 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, பிரதாப் ரெட்டி, கேசிஆர் கட்சியில் இணைந்து தற்போது காடு வளர்ப்புத் துறையின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இம்முறை, காஜ்வெல் தொகுதியில் கேசிஆரை எதிர்த்து பாஜகவின் எட்டல ராஜேந்தர் என்பவரும், காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். எட்டல ராஜேந்தர் ஹூசுராபாத் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி, கோடங்கல் தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காஜ்வெல் வந்த கேசிஆருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில் இருந்தவாறு தொண்டர்களைப் பார்த்து கைகளை அசைத்தவாறே அவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்று காலை 11 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, அவர் தனது வேட்புமனுவை கோனைபள்ளியில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி சன்னதியில் வைத்து வழிபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE