கோயில் பூசாரிகளை இழிவாக பேசியதாக அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

By செய்திப்பிரிவு

திஸ்பூர்: கோயில் பூசாரிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அசாம் காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாபுதீன் மொல்லா மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தின் ஜலேஸ்வர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அஃப்தாபுதீன் மொல்லா. இவர், கோவல்பாரா மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, கோயில் பூசாரிகள், சாதுக்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினரை பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து எல்எல்ஏ அஃப்தாபுதீன் மொல்லாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. சாதுக்களும், பூசாரிகளும் கடும் கண்டனமும் தெரிவித்தனர். இதைடுத்து எம்எல்ஏ அஃப்தாபுதீன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

எனினும் அவருக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. விளக்கம் கேட்டுஅஃப்தாபுதீனுக்கு மாநில காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதில், “உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு உடனே பதில் அளிக்க வேண்டும்” என கேட்டிருந்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகவும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பேசியதாக அஃப்தாபுதீன் மொல்லா நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “திஸ்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அஃப்தாபுதீன் மொல்லா கைது செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE