விறுவிறுப்பாக நடந்த சட்டப்பேரவை தேர்தல்: சத்தீஸ்கரில் 71%, மிசோரமில் 77% வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர் / அய்ஸ்வால்: சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின. மிசோரமில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 77.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலசட்டப்பேரவை தேர்தல் அட்டவணை கடந்தமாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர்வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நக்ஸலைட்கள் ஆதிக்கம் நிறைந்த மோலா மன்பூர், அந்தகர், பானுபிரதாப்பூர், காங்கேர், கெஸ்கல், கொண்டாகோன், நாராயண்பூர், தந்தேவாடா, பிஜாபூர், கோண்டா ஆகிய தொகுதிகளில் காலை7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. பண்டாரியா, கவர்தா, கைராகர், டோங்கர்கட், ராஜ்நந்தகோன், டோங்கர்கோன், குஜ்ஜி, பஸ்தர், ஜெகதல்பூர், சித்திரகூட் ஆகிய தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

நக்ஸலைட்கள் ஆதிக்கம் நிறைந்தபகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக பஸ்தர் பகுதியில் உள்ள 600 வாக்குச்சாவடிகளில் 60,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், நக்ஸல்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

கோண்டா தொகுதிக்கு உட்பட்ட மீனபா கிராம வாக்குச் சாவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களை நோக்கிநக்ஸலைட்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர். இதில்ஒரு வீரர் காயமடைந்தார். சிந்தால்னர், தோடோமார்க் பகுதிகளில் கண்ணிவெடியில் சிக்கி 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயமடைந்தனர்.

பண்டா, துர்மா, சிங்காராம் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்ஸல்களுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பஸ்தர்பகுதியின் உலிலா வனப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்ஸல்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அங்கு நக்ஸல்கள் விட்டுச் சென்ற ஏகே-47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அந்தகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதிகளிலும் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

நாராயண்பூர், தந்தேவாடா, ஜெகதல்பூர், சித்திரகூட் உள்ளிட்ட தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் - நக்ஸல் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. சோமபரா பகுதியில் 2 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நக்ஸல் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். தேர்தல் நடைபெற்ற 20தொகுதிகளில் மாலை நிலவரப்படி 71 சதவீத வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறும்போது, “சூதாட்ட செயலி மோசடியில் என் மீது அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதற்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

பாஜக முன்னாள் முதல்வர் ரமண்சிங் கூறும்போது, “சத்தீஸ்கர் சட்டப்பேரவைதேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி’’ என்றார்.

மிசோரமில் அமைதியான வாக்குப்பதிவு: வடகிழக்கு மாநிலமான மிசோரமின் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்றுஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மிசோரமை ஒட்டிய வங்கதேசம், மியான்மர் எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மிசோரம் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி லியான்ஜெலா கூறும்போது, “மாநிலத்தின் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

மிசோரம் முழுவதும் காலை7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 77.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்முனை போட்டி: மிசோரமில் ஆளும் தேசியமுன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.இந்த 3 கட்சிகளும் மாநிலத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜக சார்பில் 23 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்