பிஹாரில் 3-ல் ஒரு பங்கு மக்களின் மாத வருமானம் ரூ.6,000 - சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மக்கள் வறுமையில் வாழ்வதும், அவர்களின் மாதச் சம்பளம் வெறும் ரூ.6,000 மட்டுமே என்பதும் அம்மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

1931-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல் முறையாக பிஹார் அரசுதான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அண்மையில் நடத்தி முடித்தது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் விவரங்களை சட்டப்பேரவையில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

65% ஆக உயரும் இடஒதுக்கீடு: பிஹாரில் இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்தார். பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவீதத்தில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படும். பழங்குடியினர் இடஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்ககான 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் சேர்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டு அளவு 75 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட மசோதா நடப்புக் கூட்டத் தொடரிலே கொண்டுவரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பிஹாரில் 59.13 சதவீத மக்கள் சொந்த வீடு வைத்துள்ளனர். 40 லட்சம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 63,850 பேருக்கு வீடு இல்லை. அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 94 லட்சம் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளன. அவர்களுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் சில பணிகளை தொடங்க முடியும்” என்றார் முதல்வர் நிதிஷ் குமார்.

ஏழைகளும் வருமானமும்: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெட்டுப்பு முடிவுகளில் இருந்து பிஹார் மாநில நிதித்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதன்படி, பிஹாரில் வசிக்கும் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானோர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ”பிஹார் மாநிலத்தில் சுமார் 2.97 கோடி குடும்பங்கள் உள்ளன. அவர்களில் 94 லட்சத்துக்கும் அதிகமானோர் (34.13 சதவீதம்) ஏழைகள் ஆவார்கள். அதாவது அவர்களின் மாத வருமானம் ரூ.6,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கிறது. 50 லட்சத்துக்கும் அதிகமான பிஹார் மக்கள் வாழ்வாதாரம் அல்லது சிறந்த கல்வி வாய்ப்புகளைத் தேடி வேறு மாநிலத்துக்குச் சென்று வசிக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் படிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 5.52 லட்சம் ஆகும். மேலும், வெளிநாடுகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை 27,000 பேர் ஆகும். பிஹாரில் இருந்து வாழ்வாதாரம் தேடி சுமார் 46 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கும், 2.17 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அறிவு: மேலும், பிஹாரில் கல்வி அறிவு 79.70 சதவீதம் ஆக உள்ளது. பெண்களின் கல்வி அறிவு ஒப்பீட்டளவில் உயர்ந்துள்ளது. 1000 ஆண்களுக்கு தற்போது 953 பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். கடந்த 2011ல் இது 918 ஆக இருந்தது. மாதம் அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வருவாய் ஈட்டுபவர்களை ஏழைகளாக வரையறுத்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கும் வலியுறுத்தல்: முன்னதாக, பேரவையில் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, “நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை. இருந்தும், சில சாதிகளின் மக்கள் தொகை அதிகரித்துவிட்டதாகவும், சில சாதிகளின் மக்கள் தொகை குறைந்து விட்டதாகவும் கூறுகின்றனர். இது அபத்தம். நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை நாங்கள் கோருகிறோம். அப்போதுதான் ஒவ்வொருவருக்குமான கொள்கைகளை நம்மால் வகுக்க முடியும். பிஹார் ஏழ்மை நிறைந்த மாநிலம் என்பதால், இதற்கு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் பிஹார் முன்னேறும்.

2019-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பிகாரில் நடத்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தபோது நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இது குறித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கூறியது” என்றார் முதல்வர் நிதிஷ் குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

47 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்