3 மணி நிலவரம் | சத்தீஸ்கரில் 59.19%, மிசோரமில் 69.86% வாக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாலை 3 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 59.19% வாக்குகளும், மிசோரமில் 69.86% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

சத்தீஸ்கர், மிசோரமில் இன்று (நவ.7) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். மிசோரத்தில் முதல்வர் வாக்களிக்க வந்த வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்களிக்க இயலாமல் அவர் திரும்பிச் சென்றார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 3 மணி நிலவரப்படி இங்கு 59.19% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.57 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாநில போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிசோரமில் மாலை 3 மணி நிலவரப்படி 69.86% வாக்குகள் பதிவாகி உள்ளன.

காங் vs பாஜக: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நேரடி மோதல் நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் பிரதமர் மோடி மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மீது சூதாட்ட செயலி ஊழல் புகாரை முன்வைத்தார். இது அம்மாநில அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.

மிசோரம் களம் வித்தியாசமானது: சத்தீஸ்கரில் மிகத் தெளிவாக இரு பெரும் கட்சிகளுக்கு இடையே மட்டுமே மோதல் என்றால் மிசோரம் தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. அங்கு இந்த இரு பெரிய கட்சிகளுக்குமே பெரிதாக மவுசு இல்லை. அங்கு மக்கள் மனம் கவர்ந்த கட்சிகளாக மிசோ தேசிய முன்னணி (Mizo National Front -MNF) மற்றும் சோரம் மக்கள் இயக்கம் (Zoram Peoples' Movement- ZPM) ஆகிய கட்சிகள் இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE