டெல்லி காற்று மாசு | பயிர்க் கழிவுகள் எரிப்பதை உடனே நிறுத்த 4 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாயகரமான குறியீட்டிலேயே இருக்கும் சூழலில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் உடனடியாக பயிர்க் கழிவு எரிப்பதை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) அண்மைக் காலமாக 400-க்கும் மேல் உள்ளது. இது மிகவும் அபாயகரமானது சாதாரண சுவாசப் பாதை கோளாறு உள்பட ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்துக் கூடிய அளவுக்கு காற்றின் தரம் அங்கு மோசமாக உள்ளது. இதனால், டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் ஊழியர்கள் பலருக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பதிவு எண் அடிப்படையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்டு பயணத்துக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.7) விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவும், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, பஞ்சாப் மாநிலத்தின் அட்டர்னி ஜெனரல் ஆஜராகி, "பஞ்சாப்பில் பயிர்க் கழிவு எரிப்பது என்பது வெறும் 20 முதல் 50 நாட்கள் மட்டுமே நடக்கும் நிகழ்வு. அதனால் மட்டுமே டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படவில்லை" என்றார். அதற்கு நீதிபதி கவுல் கூறுகையில், "எத்தனை நாட்கள் நடைபெறுகிறது என்பதல்ல, எந்தக் காலக்கட்டத்தில் அது நடக்கிறது என்பதுதான் இங்கே பிரச்சினை. நீங்கள் பயிர்க் கழிவு எரிக்கப்படுவதை எப்படித் தடுப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. நீங்கள் கட்டாயப்படுத்தி நிறுத்துவீர்களோ அல்லது ஊக்கத் தொகை கொடுத்து நிறுத்துவீர்களோ அது தெரியாது. ஆனால், பயிர்க் கழிவு எரிப்பதை உங்கள் மாநிலத்தில் உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் காற்று மாசு பிரச்சினையில் அரசியல் போட்டாபோட்டியை அனுமதிக்க முடியாது. ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் இதே நிலை தொடரவும் விட முடியாது" என்றார்.

பஞ்சாப் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களும் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. தொடர்ந்து, "பயிர்க் கழிவு எரிக்கப்படுவதுதான் காற்று மாசுபாட்டுக்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது. டெல்லியில் ஒவ்வோர் ஆண்டும் இதே நிலை தொடர அனுமதிக்க முடியாது. டெல்லி அரசானது நகராட்சி சேகரிக்கும் திடக் கழிவுகளை பொது வெளியில் எரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிமன்றம் கூறியது.

தீர்வு காணுங்கள்: நாளை (நவம்பர் 8) இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை நேரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ நடத்த உத்தரவிட்டது. வெள்ளிக்கிழமைக்குள் காற்று மாசு பிரச்சினை தொடர்பாக ஒரு தெளிவானப் புரிதலோடு ஏதேனும் தீர்வும் எட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அத்துடன், இந்த வழக்கு விசாரணை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசுக்குக் கண்டனம்: இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாக அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் அபராஜிதா சிங், டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புகை கண்காணிப்பு கோபுரம் (ஸ்மாக் டவர்) பழுதாகி உள்ளது என்றார். அதற்கு நீதிமன்றம் டெல்லி அரசை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE