இந்திய ஒற்றுமை யாத்திரை 2.0: டிசம்பர் - பிப்ரவரியில் நடத்த காங்கிரஸ் திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை 2-ஆம் பாகத்தை வரும் டிசம்பர் தொடங்கி பிப்ரவரி 2024 வரை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இறுதி முடிவு எட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 2.0 யாத்திரை முழுவதும் நடைபயணமாக இல்லாமல் நடைபயணமும், வாகனப் பயணமும் இணைந்ததாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய ஒற்றுமை யாத்திரை முதல் பாகம் கடந்த 2022 செப்டம்பர் 7-ல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி ஜனவரி 2023-ல் ஸ்ரீநகரில் நிறைவுபெற்றது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார். மத்தியில் ஆளும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமத்துவமின்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகவுமே இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதல் பாகம் 2022-ம் ஆண்டு செப். 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100 க்கும் அதிகமான தனிஉரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாகவே தற்போது இரண்டாம் பாகத்தையும் காங்கிரஸ் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை 2.0 அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி, வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE