‘மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிட கூடாது’ - ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் உள்ளார். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 27 மசோதாக்களில் 22-க்கு மட்டுமே ஆளுநர் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

பண மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால்தான் பேரவையில் தாக்கல் செய்ய முடியும். இந்தநிலையில், மாநில அரசு 3 பண மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. கடந்த அக்.20-ம் தேதி கூடிய 4-வது சிறப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டிமிட்டிருந்தது.

ஆளுநர் நிறுத்திவைப்பு: ஆனால், அதற்கு முந்தைய நாளான அக்.19-ம் தேதி முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், 3 மசோதாக்களையும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டிருந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதியே முடிந்துவிட்ட நிலையில், சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது சட்டவிரோதம் என்றும் ஆளுநர் தனது கடிதத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து, 20-ம் தேதி கூடியசிறப்பு கூட்டத்தொடர் சில மணிநேரங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த நவ.1-ம் தேதி 2 பண மசோதாக்களுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

பஞ்சாப் அரசு மனு தாக்கல்: தற்கிடையே, பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்தாமதம் செய்வதாக, பஞ்சாப் மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ்மிஸ்ரா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:

நீதிபதிகள்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இது கவலை அளிப்பதாக உள்ளது.

இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வரை வந்த பிறகுதான் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இதற்கு முன்பு, தெலங்கானா மாநில அரசு மனு தாக்கல் செய்த பிறகு, கிடப்பில் இருந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆய்வு செய்ய ஆளுநர்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதேநேரம், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது. ஆளுநர்களும், மாநில அரசுகளும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் ஆன்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: நிதி மேலாண்மை, ஜிஎஸ்டி திருத்தங்கள், குருத்வாரா நிர்வாகம் உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம்ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் ஆளுநர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: மசோதாக்கள் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மாநில அரசு தேவையின்றி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்த விவரங்களை வரும் 10-ம் தேதி தெரிவிக்கிறேன்.

அறிக்கை அளிக்க உத்தரவு: நீதிபதிகள்: மசோதாக்கள் மீதுபஞ்சாப் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு வரும் 10-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மூத்த வழக்கறிஞர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்: இதே விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள ஆளுநர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களையும் வரும் 10-ம் தேதி விசாரிக்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, ‘‘பஞ்சாப் அரசின் மனுவுடன், கேரளா, தமிழ்நாடு அரசுகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதும் 10-ம் தேதி விசாரணை நடைபெறும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, 8-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் தரவில்லை என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்