டெல்லி - வடகிழக்கு மாநிலங்கள் இடையே போக்குவரத்து வசதியை மேம்படுத்தியது பாஜக அரசு: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி- வடகிழக்கு மாநிலங்கள் இடையே போக்குவரத்து வசதியை மேம்படுத்தியது பாஜக அரசு என மிசோரம் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரம் மாநிலமும் ஒன்று. இங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மிசோரம் மக்கள் இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு மிசோரம் போன்ற வட கிழக்கு மாநிலங்கள் டெல்லியிலிருந்து வெகு தொலைவில் உள்ளதாக மக்கள் கருதினர். இதை உணர்ந்த பாஜக அரசு, வடகிழக்கு மாநில மக்களின் எண்ணங்கள் மற்றும் தேவைகளை நிறைவேற்றி, டெல்லிக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே நிலவிய இடைவெளியை போக்கியது.

மிசோரம் மாநிலம் இயற்கையும், பண்பாடும் நிறைந்த மாநிலம். உலக சுற்றுலா தலமாக மாறும் சக்தி மிசோரம் மாநிலத்துக்கு உள்ளது. இங்கு கட்டமைப்புகள் மேம்படும்போது, வர்த்தகம், மக்களின் திறன் மற்றும் சுற்றுலா ஆகியவை மேம்படும். கட்டமைப்பு வசதிகள்தான் முதலீட்டையும், தொழிற்சாலைகளையும், வருமானத்தையும், வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது.

புரட்சி ஏற்பட்டது: பாஜக தலைமையிலான அரசு செய்த பணிகள் காரணமாக மிசோரம் மாநிலம் முழுவதும் பல துறைகளில் புரட்சி ஏற்பட்டது. மிசோரம் மாநிலத்துக்கு நான் முன்பு வந்த போது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவேன் என உறுதியளித்தேன். கடந்த 2014-ம் ஆண்டு வரை வடகிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 11,000 கிலோ மீட்டராக இருந்தது. அதை நாங்கள் தற்போது 16,000 கி.மீட்டராக உயர்த்தியுள்ளோம். எங்கள் அரசின் பணியால்தான் பல துறைகளில் புரட்சி ஏற்பட்டது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

40 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மிசோ தேசிய முன்னணி 26 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE