தேர்தலுக்கு முன்பு பெருமாள் பாதத்தில் வேட்பு மனு - முதல்வர் சந்திரசேகர ராவின் சென்டிமென்ட் பலிக்குமா?

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தலை சந்திக்கும் முன்பு சித்திபேட்டையில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி அவர் நேற்று சித்திபேட்டை கோயிலுக்கு சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனுவை வைத்து வழிபட்டார். இந்த சென்டிமென்ட் இம்முறை அவருக்கு கை கொடுக்குமா என்பது டிசம்பர் 3-ம் தேதி தெரியவரும்.

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர ராவ், 3-வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என அவர் உறுதியாக கூறி வருகிறார். ஆன்மிகவாதியான அவர், 3-வது முறை ஆட்சி அமைப்பதற்காக சாரதா பீடாதிபதியான ஸ்வரூபானந்த சுவாமியின் தலைமையில் அண்மையில் ராஜசியாமள யாகத்தை 3 நாட்கள் நடத்தி முடித்தார். வரும் 9-ம் தேதி கஜ்வேல் மற்றும் காமாரெட்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சந்திரசேகர ராவ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஒவ்வொரு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக சித்திபேட்டை மாவட்டம், சங்கநூரு மண்டலம், கோனய்யபல்லி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாள் பாதத்தில் வேட்பு மனுவை சமர்ப்பித்துவிட்டு, சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் சந்திரசேகர ராவ் வேட்பு மனுவை தாக்கல் செய்வது வழக்கம்.

இதன்படி அவர் நேற்று தனது மருமகன் ஹரீஷ் ராவ், கட்சி நிர்வாகிகள், சில வேட்பாளர்களுடன் சித்திபேட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு சென்றார்.

அங்கு சந்திரசேகர ராவை பொதுமக்கள், பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் சிறப்பு பூஜைகள் நடத்தி, வேட்பு மனுக்களை பெருமாளின் காலில் வைத்து வழிபட்டார். இந்த சென்டிமென்ட் இம்முறை பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள டிசம்பர் 3-ம் தேதி தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE