தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகானா, ராஜா மான்சிங்கா? - ஆய்வு நடத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தாஜ்மஹாலை கட்டியது யார் என்ற உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் என்று இந்து சேனா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சேனா அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "முகலாய அரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்படவில்லை. 17ம் நூற்றாண்டு நினைவுச்சின்னமான தாஜ்மஹால், முதலில் ராஜா மான்சிங்கின் அரண்மனையாக இருந்தது. மான்சிங்கின் அரண்மனையே ஷாஜகான் மனைவியின் கல்லறையாக மாற்றப்பட்டது. எனவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான தகவல்களை வரலாற்று புத்தகங்களில் இருந்து அகற்றவும், தாஜ்மஹாலின் வயது, ராஜா மான்சிங் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தவும் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்." என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, துசார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை சார்பில் தாஜ்மஹாலை கட்டியது யார் என்பதை ஆய்வு செய்துவது குறித்து பரிசீலித்துவருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின், தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு குறித்தும், ராஜா மான்சிங்கின் அரண்மனையைச் சீரமைத்து ஷாஜகான் பயன்படுத்தினாரா என்பது குறித்தும் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE