ம.பி.யில் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் கட்சியினர் 39 பேரை நீக்கியது காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேச தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 39 கட்சிப் பிரமுகர்களை 6 ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது.

இந்த 39 பேரும் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் நேரடி உத்தரவின் பெயரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, மாநிலத் துணைத் தலைவர் ராஜீவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள கட்சிப் பிரமுகர்கள் சுயேட்சையாகவோ, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பிலோ போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது.

கட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு (அலோட்), முன்னாள் எம்எல்ஏ அந்தர் சிங் தர்பார் (மோவ்) முன்னாள் எம்எல்ஏ யத்வேந்த்ர சிங் (நாகாட்), கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் அஜய் சிங் யாதவ் கார்காபூர், நசீர் இஸ்லாம் (போபால் வடக்கு) மற்றும் அமிர் அக்யூஸ் (போபால் வடக்கு) போன்ற முக்கியமான சிலரும் அடங்குவர்.

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்தமாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜகவும், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டிவருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE