“தீயநோக்கம் கொண்ட பிரச்சாரம்” - ‘பெட்டிங்’ செயலி தொடர்பு குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் சட்டவிரோத பெட்டிங் செயலியிடமிருந்து பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மேலும் இது தீங்கான நோக்கம் கொண்ட பிரச்சாரம் என சாடியுள்ளது.

சட்டவிரோதமான பந்தையத்தை ஊக்குவிக்கும் மஹாதேவ் செயலியிடமிருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றார் என்று அமலாக்கத்துறை தெரிவத்த அடுத்த நாள் காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் மற்றும் அபிஷேக் சிங்வி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது, இது பூபேஷ் பாகலின் புகழைக் கெடுக்கும் ஒரு தெளிவான சதிச் செயல், மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் பாஜகவின் முக்கியமான ஆயுதங்களாக மாறியுள்ளன. கர்நாடகா தேர்தலின் போது அவர்கள் 100-க்கும் அதிகமான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக சோதனை நடத்தினர். எட்டு, ஒன்பது மாதங்கள் கடந்து விட்டது ஆனால் அதுபற்றிய எந்த செய்தியும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை" என்றார்.

அபிஷேக் ஷிங்வி கூறுகையில், "அவர்கள் (பாஜக தலைமையிலான அரசு) சத்தீஸ்கரில் தோல்வியை உணரத் தொடங்கிவிட்டதால் அமலாக்கத்துறையுடனான அவர்களின் கூட்டு அதிகரித்து வருகிறது. பாஜக ஒரு பெரிய தோல்வியை நோக்கிச் செல்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இதனை அறியும்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி, ஹவாலா பணம் கையாளுபவர்களின் உதவியுடன் தேர்தல் செலவுகளை எதிர்கொள்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "இது மிகப்பெரிய ஊழல், ஊழல் செய்வது, ஆட்சிக்கு வருவது, மக்களை ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகி விட்டது. பூபேஷ் பாகலின் ஆட்டம் முடிவடைந்துவிட்டது. அவர் நிச்சயம் சிறைக்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக, இன்னும் சில நாட்களில் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோத பந்தையங்களை ஊக்குவிக்கும் மஹாதேவ் என்ன செயலியிடமிருந்து பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்வரிடமிருந்து வாக்குமூலம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர் அரசு இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளதுடன், மாநிலத் தேர்தலுக்காக அமலாக்கத் துறை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE