“அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காங்கிரஸ்தான் காரணம்” - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ராஜ்சமந்த் (ராஜஸ்தான்): இந்திய அரசியலில் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

200 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரஸுக்கும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி என்பதால், ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில், ராஜ்சமந்த் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார். "அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நம்பிக்கையின்மை தொடர்ந்து ஆழமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசியலில் இத்தகைய நம்பிக்கை நெருக்கடி ஏற்பட காங்கிரஸ் கட்சிதான் காரணம். இந்திய அரசியலில் நிலவும் இந்த நம்பிக்கை நெருக்கடியை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டுள்ளோம்.

கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தானின் ஆளும் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டன என்பது அனைவருக்கும் தெரியும். தனிநபராக இருந்தாலும் சரி, அமைப்பாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை மதிக்க வேண்டும். சொல்லிலும் செயலிலும் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால், காங்கிரஸ் கட்சி சிறிதும் கவனம் இன்றி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இவ்விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE