“கட்சி மேலிடம் கூறினால் முதல்வர் பொறுப்பு ஏற்பேன்” - கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “கட்சி மேலிடம் என்னிடம் கூறினால் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்பேன்” என்று கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் முதல்வராவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்க் கார்கே, "அதுகுறித்து கட்சி மேலிடம் சொல்லவேண்டும். அவர்கள் என்னை முதல்வராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டால், நான் அதனை மறுக்க மாட்டேன்" என்று தெரிவித்தார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியை சாடிய பிரியங்க் கார்கே, மாநிலத்தில் உள்ள சில அவநம்பிக்கையான பாஜக தலைவர்கள் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரூ.1,000 கோடி கேட்டிருக்கலாம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மாண்டியாவின் காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமார் கனியா, பாஜக குழு ஒன்று நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களை அணுகி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 கோடி தருவதாகவும், பாஜகவுக்கு மாறினால் அமைச்சர் பதவி தருவதாகவும் கூறியுள்ளனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பிரியங் கார்கே இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, மாநிலத்தின் தற்போதைய முதல்வரான சித்தராமையா, காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளும் ஆட்சியை நிறைவு செய்யும் என்று வியாழக்கிழமை உறுதிபட தெரிவித்தார். அவர் கூறுகையில், "எங்களுடைய அரசு 5 ஆண்டுகளும் ஆட்சியில் இருக்கும். அந்த 5 ஆண்டுகளும் நானே முதல்வர் பதவியில் தொடருவேன்" என்று தெரிவித்திருந்தார். ஆளும் காங்கிரஸினரிடைய ஒரு பிரிவினருக்குள் இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த சந்தேகம் எழுந்த நிலையி்ல், முதல்வர் இவ்வாறு விளக்கமளித்தார்.

கர்நாடாகாவில் கடந்த மே 20-ம் தேதி வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின்போது காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போதே மாநிலத்தின் முதல்வர் யார் என்றே எதிர்பார்ப்பும், போட்டிம் நிலவியது. ஒருவார கால அமைதிக்கு பின்னர், சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். என்றாலும் இரண்டரை ஆண்டுகளுக்கு பினன்னர் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என ஒரு பேச்சு எழுந்தது நினைவுகூர்த்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE