“சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகரிப்பு” - அமித் ஷா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பண்டரியா: சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இங்கு மத மாற்றம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் இம்மாநிலத்தை பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மோடி, அமித் ஷா ஆகியோர் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். நேற்று சத்தீஸ்கரில் பேசிய மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்காது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பண்டாரியா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விருப்பப்படி நடந்துகொள்ள அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம் அளித்துள்ளது. ஆனால், அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏழை பழங்குடியினரை மத மாற்றம் செய்யத் தொடங்கியுள்ளனர். இது அரசின் நலனுக்கு உகந்ததல்ல.

இதன் விளைவாக, மாநிலத்தின் ஒவ்வொரு வீடு மற்றும் கிராமங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. யாருடைய மதப் பிரச்சினையிலும் பாஜக அரசு தலையிடாது. ஆனால், எந்த அரசு மத மாற்றத்தை ஊக்குவித்தாலும் அதைத் தடுக்க பாஜக சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பூபேஷ் பாகேல் காங்கிரஸின் ப்ரீபெய்டு முதல்வர். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவரை (ஏடிஎம் கார்டு போல) அவரது கட்சி மாற்றிக் கொள்ளும். அதன் பிறகு மாநிலத்தில் இருந்து அனைத்து பணத்தையும் டெல்லிக்கு எடுத்துச் செல்லும்” என்றார் அமித் ஷா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE