மராத்தா இடஒதுக்கீடு | உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் மனோஜ் ஜராங்கே: அரசுக்கு 2 மாதம் கெடு

By செய்திப்பிரிவு

மும்பை: மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இருப்பினும் சட்டப்படி இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட அரசுக்கு அதிகபட்சம் இரண்டு மாத காலம் கெடு விதித்துள்ளார்.

மகாராஷ்டிரா மக்கள் தொகையில் மராத்தா சமூகத்தினரின் பங்கு 33 சதவீதமாக உள்ளது. இப்போது பொதுப் பிரிவில் உள்ள இவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த சூழலில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் அந்த மாநிலத்தில் தீவிரமடைந்தது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் 25-ம் தேதி உண்ணாவிரதத்தையும் அவர் தொடங்கினார். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும் இதனை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதோடு மனோஜ் ஜராங்கே பாட்டீல் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதனை அம்மாநிலத்தின் அமைச்சர்கள் நான்கு பேர் ஜால்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மனோஜ் ஜராங்கேவிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று அவரும் தனது ஒன்பது நாள் உண்ணாவிரத போராட்டத்தை வியாழக்கிழமை அன்று பழச்சாறு உட்கொண்டு முடித்துக் கொண்டார். அதே நேரத்தில் இரண்டு மாத காலத்துக்குள் இட ஒதுக்கீடு குறித்த முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையென்றால் மும்பையை முற்றுகையிடுவோம் என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE