மனைவியை பிரிந்தார் சச்சின் பைலட் - வேட்புமனுவில் தகவல்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் தனது மனைவி சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்துள்ளார் என்கிற தகவல், அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லா திருமணம் செய்திருந்தார். 2004-ல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஆரன் மற்றும் வெஹான் என இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாக இல்லற வாழ்க்கையில் இணைந்திருந்த இவர்கள் விவாகரத்து செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25-ம் தேதி நடக்கவுள்ள இந்தத் தேர்தலில் அம்மாநில முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட் டோங்க் தொகுதி போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், தனது மனைவி சாரா அப்துல்லாவை விவாகரத்து செய்துள்ளதாக சச்சின் பைலட் தகவலளித்துள்ளார். மேலும், தனது மகன்கள் இருவரும் தன்னுடன் வசிப்பதாகவும் அதில் மேற்கோள்கட்டியுள்ளார்.

அதேநேரம், கடந்த ஐந்தாண்டுகளில் சச்சின் பைலட்டின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 2018-ம் ஆண்டில், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது தனது சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய் மதிப்பு அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE