“சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை” - ம.பி.யில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசம்

By செய்திப்பிரிவு

போபால்: “மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், அவர் இன்று (நவ.2) ஆஜராகிறார் என்று செய்திகள் வெளியாகின. அவர் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து, ‘அமலாக்கத் துறை முன்பு கேஜ்ரிவால் ஆஜராகப்போவதில்லை. மாறாக, மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்’ என தகவல் வெளியானது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு சாலையோர பிரச்சார நிகழ்வில் வியாழக்கிழமை (இன்று) உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை. கேஜ்ரிவால் சிங்ராலிக்கு வந்தார், நாங்கள் அவருக்கு ஒரு வரலாற்று வெற்றியைக் கொடுத்தோம் என்று நீங்கள் அனைவரும் சொல்ல வேண்டும். டெல்லி, பஞ்சாப் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது போல, வரும் நாட்களில் மத்தியப் பிரதேச மக்களும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள்.

டெல்லியில், தினமும் என்னைக் கைது செய்வதாக மிரட்டுகிறார்கள். கேஜ்ரிவாலின் உடலைக் கைது செய்யலாம், ஆனால் அவரின் எண்ணங்களை நீங்கள் எப்படிக் கைது செய்வீர்கள்? லட்சக்கணக்கான கேஜ்ரிவால்களை எப்படி கைது செய்வீர்கள்? பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தீர்கள். இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும், நாட்டில் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று கேட்கிறார்கள். இப்போது யாருடைய வாயை மூடுவீர்கள்?" என்று பேசினார்.

அமைச்சர் வீட்டில் சோதனை: இதற்கிடையில், டெல்லி சமூகநலத் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுங்கத் துறை சம்பந்தமான இந்த வழக்கில் அமைச்சர் ஆனந்த் ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE