“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்காது” - சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

கான்கெர் (சத்தீஸ்கர்): காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளிலும் நடைபெற உள்ளன. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இம்மாநிலத்தை மீண்டும் பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கரின் கான்கெர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "கான்கெரில் பாஜகவுக்கு மிகப் பெரிய ஆதரவு இருப்பதை பார்க்க முடிகிறது. சத்தீஸ்கரின் அடையாளத்தை வலுப்படுத்துவது; பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பது; சத்தீஸ்கரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவது ஆகியவையே பாஜகவின் நோக்கம். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி இருக்காது. காங்கிரஸும் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று சேராது.

சத்தீஸ்கர் மக்களும் பாஜகவும் சேர்ந்து உருவாக்கியதுதான் சத்தீஸ்கர் மாநிலம். காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் இருந்தபோது, அது சத்தீஸ்கரில் அப்போது இருந்த பாஜக அரசோடு மோதல் போக்கையே கொண்டிருந்தது. ஆனால், நாங்கள் தற்போதைய காங்கிரஸ் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் வெறும் எம்எல்ஏவை தேர்ந்தெடுப்பதற்கானது அல்ல. மாறாக உங்களின், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகாலமாக தோல்வி அடைந்த ஆட்சியை காங்கிரஸ் கொடுத்து வருவதை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். இந்தக் காலத்தில், காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் உறவினர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்களின் மாளிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், ஏழைகளுக்கு, தலித்துகளுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பழங்குடியின மக்களுக்கு என்ன கிடைத்தது? கான்கெர் தொகுதியிலும் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் உள்ள பஸ்தரிலும் எதுவும் கிடைக்கவில்லை. மோசமான சாலைகள், தரமற்ற மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றைத்தான் காங்கிரஸ் அரசு அளித்து வருகிறது. தற்போதுள்ள காங்கிரஸ் அரசு, ஊழலில் புதிய சாதனையை படைத்துள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE