சென்னை: காற்று மாசுபாட்டுக்கும் சென்னை, டெல்லியில் டைப்-2 நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக சர்வதேச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டுக்கும் நீரிழிவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த ஆய்வறிக்கை கவனம் பெறுகிறது என்பதைக் காட்டிலும் இதுவரை மேற்கத்திய நாடுகள், சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் தொடர்ப்பு இப்போது நகர்ப்புற இந்தியாவிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்று தரக் குறையீட்டு அளவைவிட மோசமான தரக் குறியீடு கொண்ட நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் சமீப காலமாக முன்னணியில் இருந்து வருகின்றன. இந்நிலையில், இந்த அறிக்கை வெளியாகி கூடுதல் கவனம் பெறுகிறது.
பிஎம் 2.5 நுண்துகள்கள் என்றால் என்ன? - இந்தியாவில் இறப்பதற்கு உரிய காரணங்களில் காற்று மாசுபாடு 5-வது இடத்தில் உள்ளது. காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. காற்று மாசுபாட்டுக் குறியீட்டில் 2.5 முதல் 10 வரை மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண் துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள்தான் உடலுக்கு மிக தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இந்த துகள்கள்தான் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், பிஎம் 2.5 நுண்துகளுக்கு தொடர்ச்சியாக எக்ஸ்போஸ் ஆவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெற்கு ஆசிய பிராந்தியத்துக்கான கார்டியோ - மெட்டபாலிக் இடர் குறைப்பு அமைப்பின் கண்காணிப்பு அமைப்பு CARRS சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் சென்னையிலிருந்து 6,722 பேரையும், டெல்லியில் இருந்து 5,342 பேரையும் தேர்வு செய்து அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் அடங்கிய தொகுப்பினைக் கொடுத்து அதற்குப் பதிலும் பெற்றனர்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்களில் உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவையும், குறிப்பிட்ட கால இடைவேளையில் எடுக்கப்படும் HbA1c ரத்த சர்க்கரை அளவையும் பரிசோதித்துள்ளனர். மேலும், அவர்கள் காற்று மாசுபாட்டுக்கு வெளிப்படும்போது மற்ற நபர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஏற்படும் உபாதைகள் பற்றியும் குறிப்பெடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், ஓராண்டில் சராசரியாக PM 2.5 என்றளவில் காற்று மாசுபாட்டுக்கு உள்ளாவது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவ்வப்போது இதுபோன்ற காற்று மாசுபாட்டுக்கு ஆளாவதால் அல்லாது நீண்ட காலத்துக்கு PM 2.5 என்றளவிலான காற்று மாசுபாட்டுக்கு ஆளாகும்போதே டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகரிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணத்துக்கு, ஒவ்வொரு மாதமும் PM 2.5 காற்று மாசுபாட்டு குறியீட்டுக்கு ஒரு நபர் எக்ஸ்போஸ் ஆகிக் கொண்டே வந்தால் 6 மாதங்களில் உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு ஒரு டெசிலிட்டருக்கு 0.21 என்றளவில் இருந்து 0.58 என்றளவுக்கு அதிகரிக்கும். ஹெச்பி1ஏசி அளவும் 0.012 ல் இருந்து 0.024 என்றளவுக்கு அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். இது டெல்லி நிலவரம்.இதுவே சென்னையில் உணவுக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு ஒரு டெசிலிட்டருக்கு 0.36 என்றளவில் இருந்து 1.39 என்றளவுக்கு அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வறிக்கை BMJ Open Diabetes Research & Care மருத்துவ இதழில் வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உயர் ரத்த அழுத்தம் இருப்போர் காற்று மாசுபாட்டுக்கு அதிகம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும்போது அவர்களுக்கு நீரிழிவு நோயும் அதுவும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் இளைஞர்களும் கூட காற்று மாசுபாட்டால் நீரிழிவு நோய்க்கு உட்படுவது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
வெளியில் இருக்கும் காற்று மாசுபாடு எப்படி ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்ற ஐயத்துக்கு PM 2.5 நுண் துகள்களுக்கு அதிமாக எக்ஸ்போஸ் ஆதல் பல்மனரி ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Pulmonary Oxidative Stress) ஏற்படுத்துகிறது. அதனால், வாஸ்குலார் இஸ்சுலின் எதிர்ப்புத் திறன் தூண்டப்பட்டு சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தது. கூடவே, காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்வது எதிர்கால சந்ததி மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago