“வங்கி மூலம் கட்சிகளுக்கான நிதி வருவதை தேர்தல் பத்திர திட்டம் உறுதி செய்கிறது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது அல்ல; அவை கட்சிகளுக்கான நிதியை வங்கிகள் வாயிலாக சுத்தமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக, ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும், தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

முன்னதாக, இந்த வழக்கில் ஏடிஆர் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்படும் பணம் அரசு கொள்கைகளில் செய்த சமரசத்துக்கான பிரதிபலனாகவே சென்று சேர்கின்றன என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. மத்தியில் அல்லது மாநிலங்களில் அதிக தேர்தல் நிதியைப் பெறும் கட்சி ஆளுங்கட்சியாகத் தான் இருக்கிறது என்பதே இதற்கு சாட்சி" என்றார்.

இந்நிலையில், இன்றைய (நவ.1) விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "தேர்தல் பத்திரங்கள் அனைத்தும் வங்கிகளில் வாங்கப்படுகின்றன. அப்படியென்றால் பெருமளவில் நிதியளிப்பவர் எப்படி எஸ்பிஐ போன்ற வங்கிக் கணக்கில்தான் அறியப்படுவதை விரும்புவார். தேர்தல் பத்திரங்கள் வழங்குவோரின் அடையாளம் தெரியாமல் இருக்கும் சலுகை நிச்சயம் பிரச்சினைக்குரியதே.

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மிகப் பெரிய அளவில் தேர்தல் நிதி வழங்க விரும்பும் நபர், அதை ஒரே ஆளாக வங்கியில் செலுத்தமாட்டார். எவ்வளவு தூரம் அதனை பிரித்தளிக்க முடியுமோ அந்தளவுக்கு அதனை பிரித்தளிப்பார். இதனால், அந்தப் பெருந்தொகைக்கான உண்மையான உரிமையாளர் யார் என்பது கடைசிவரை தெரியாமல் போகும் அல்லவா?" என்று வினவினார்.

அப்போது சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, "இதுபோன்ற தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். உதாரணத்துக்கு நான் ஒரு கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கிறேன், ஆனால் இன்னொரு கட்சி ஆட்சிக்கு வருகிறது. நான் வேறு கட்சிக்கு பெருந்தொகை கொடுத்தேன் என்பதற்காகவே நான் பழிவாங்கப்பட மாட்டேன் என்பதில் என்ன நிச்சயம்? அதனால், அநாமதேயராக நிதி அளித்தல் என்பது பின்னாளில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படக் கூடாது என்பதற்காகவே" என்றார்.

அதேபோல் ஆளுங்கட்சியே அதிக நிதி பெறுகிறது என்ற மனுதாரரின் வாதத்துக்குப் பதிலளித்த துஷார் மேத்தா, "ஆளுங்கட்சிக்கே நிறைய நிதி வருகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் நான் அதை ஆமோதிக்கிறேன். ஆனால், அது என் கருத்தே தவிர, அது அரசாங்கத்தின் பதில் இல்லை. தேர்தல் நிதியின் பின்னால் இருக்கும் சூட்சமத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் நிதி வழங்கும் பெரும் புள்ளி ஒருவர், இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனக்கு சாதகமாக இருக்கும் என நினைத்திருக்கலாம். அதனால் கொடுக்கலாம். நிதி கொடுப்பவர்கள் யாரும் அதை தானமாகத் தரவில்லை. அவர்கள் அதிலும் வியாபாரம் தான் செய்கின்றனர். ஒரு தலைவர் எவ்வளவு தூரம் சக்திவாய்ந்தவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு தொழில் நடத்துவதில் சுமுகத் தன்மை ஏற்படும் என்பதை கணித்து அவர்கள் நிதி கொடுக்கிறார்கள்” என்றார்.

மேலும், ஏடிஆர் ஆய்வறிக்கை ஒன்றையும் வாசித்தார். ‘Analysis of Sources of Funding of National and Regional Parties- FY 2004-05 to 2014-15’ என்ற அறிக்கையில் உள்ள தகவலை அவர் குறிப்பிட்டு, “2004 - 2005 காலகட்டத்தில் தேசியக் கட்சிகளின் அடையாளம் தெரியாத ஆதாரம் மூலமாக வந்த வருமானம் ரூ.274.13 கோடியாக இருந்ததாகவும், அதுவே 2014-15 காலகட்டத்தில் அது 313 சதவீதம் அதிகரித்து ரூ.1130.92 கோடியாக உயர்ந்துவிட்டது என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதையும் நீதிமன்றம் கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.

இன்றைய வாதத்தின்போது தலைமை நீதிபதி சந்திரசூட், "தேர்தல் பத்திரங்கள் மூலமாக அளிக்கப்படும் நிதி, ஒரு தனி நபரைச் சேராமல் ஒரு கட்சிக்கென்று சேர்வது நல்ல விஷயம்" என்று கூறினார். இன்றைய வாதம் நிறைவடைந்து விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE