தெலங்கானா பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி.

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: முன்னாள் எம்.பி.,யும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஜி.விவேக் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் நிலையில் இது பாஜகவுக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு இந்த மாதம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக அங்கு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச்சூழ்நிலையில், பாஜக முன்னாள் எம்.பி.,யும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஜி.விவேக் வெங்கடசாமி பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தனது இந்த முடிவினை அவர் தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு எழுதியக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய விவேக், காங்கிரஸ் முக்கிய தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரெவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள விவேக்கை முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

மாநிலத்தின் முனுகோட் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய மற்றொரு பாஜக மூத்த தலைவர் கோமதி ரெட்டி ராஜ் கோபால் ரெட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒரு வாரகாலத்துக்குள் விவேக் வெங்கடசாமியும் பாஜகவிலிருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா மாநிலத்தில் நவ.30ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிச.3ம் தேதி நடக்க இருக்கிறது. மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE