”எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி செய்திருக்கலாம்!” - ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் செய்தி; பியூஷ் கோயல் கருத்து

By செய்திப்பிரிவு

டெல்லி: ”எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” என எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் செய்தி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களின் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, "இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்" என்றார்.

இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "எதிர்க்கட்சித் தலைவர்களை யாராவது கேலி (Prank) செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதிகாரபூர்வமாக புகாரளிக்க வேண்டும், அதனடிப்படையில் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். அதனால்தான், அவர்கள் எல்லாவற்றிலும் சதி நடப்பதாகவே பார்க்கிறார்கள்.

இது ஒருவித செயலிழப்பு எச்சரிக்கை நடவடிக்கைதான் என்று ஆப்பிள் நிறுவனமே தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செய்தி 150 நாடுகளிலுள்ள மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. ஹேக்கர்களும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆப்பிள் நிறுவனமும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அவர்களின் நிலை நாட்டுக்குத் தெரியும். உட்கட்சிப்பூசல்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE