கெவாடியா (குஜராத்): “தேசிய ஒருமைப்பாட்டின் பாதையில், நமது வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய தடையாக இருப்பது குறிப்பிட்ட பகுதியினரைத் திருப்திப்படுத்தும் அரசியல்தான்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும் நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். படேலின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்திய பிரதமர், பின்னர் பேசியது: "தேசிய ஒற்றுமை தினம் இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் அதன் வீரர்களின் ஒற்றுமையின் வலிமையைக் கொண்டாடுகிறது. இங்கே ஒருவகையில், சிறிய இந்தியாவின் வடிவத்தை என்னால் காண முடிகிறது. மொழிகள், மாநிலங்கள் மற்றும் பாரம்பரியங்கள் வேறுபட்டிருந்தாலும், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையின் வலுவான இழையில் இணைக்கப்பட்டுள்ளனர். "மணிகள் ஏராளம், ஆனால் மாலை ஒன்றுதான். நாம் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்தாலும், ஒற்றுமையாக இருக்கிறோம்.
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகியவை சுதந்திர மற்றும் குடியரசு தினங்களாக அங்கீகரிக்கப்பட்டதைப் போலவே, அக்டோபர் 31 நாடு முழுவதும் ஒற்றுமையின் திருவிழாவாக மாறியுள்ளது. செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள், கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பு, அன்னை நர்மதா நதிக்கரையில் உள்ள ஒற்றுமை சிலையால் தேசிய ஒற்றுமை தினம் ஆகிய கொண்டாட்டங்கள் தேசிய எழுச்சியின் மும்மூர்த்திகளாக மாறியுள்ளன.
ஒற்றுமை நகருக்கு வருகை தரும் மக்கள் ஒற்றுமை சிலையை பார்ப்பது மட்டுமல்லாமல், சர்தார் படேலின் வாழ்க்கையையும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது பங்களிப்பையும் காணலாம். ஒற்றுமை சிலை ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. இந்த சிலை அமைக்கப்பட்டததில் குடிமக்களின் பங்களிப்பு உள்ளது. இச்சிலைக்காக விவசாயிகள் தங்கள் கருவிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்கள். ஒற்றுமைச் சுவர் எழுப்புவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் கோடிக்கணக்கான குடிமக்கள் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சர்தார் படேலின் கொள்கைகள் 140 கோடி மக்களின் மையமாக உள்ளன. அவர்கள் ஒரே இந்தியா உன்னத இந்தியாவின் உணர்வைக் கொண்டாட ஒன்றிணைகிறார்கள்.
» “எனது பாட்டிதான் எனது பலம்” - இந்திரா காந்தியை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி
» “எதிர்க்கட்சியினரின் செல்போன்களில் அரசு ஊடுருவலா?” - மஹுவா உள்ளிட்ட எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
அடுத்த 25 ஆண்டுகள் நாட்டிற்கு இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான 25 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் இந்தியா வளமான மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாறும். சுதந்திரத்திற்கு முந்தைய 25 ஆண்டுகளில் காணப்பட்ட அதே அர்ப்பணிப்பு உணர்வு இப்போது நாட்டிற்கு இருக்க வேண்டும். உலகில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து வருகிறது. மிகப்பெரிய ஜனநாயகத்தின் மதிப்பை ஒரு புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதில் நாம் பெருமையடைகிறோம்.
உள்நாட்டு பாதுகாப்பில் இரும்பு மனிதர் சர்தார் படேல் அசைக்க முடியாத அக்கறையைக் கொண்டிருந்தார். உள்நாட்டு பாதுகாப்புக்காக மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேசத்தின் ஒற்றுமை மீதான தாக்குதல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப் பெரிய தடையாக இருப்பது குறிப்பிட்டப் பிரிவினரைத் திருப்திப்படுத்தும் அரசியலாகும். இதில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதத்தை கண்டுகொள்ளாமல், மனிதகுலத்தின் எதிரிகளுடன் நிற்பதைக் கடந்த பல தசாப்தங்களாகக் காண முடிகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற சிந்தனைகளுக்கு எதிராக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய நாட்டின் ஒற்றுமையைப் பேணுவதற்கான நமது முயற்சிகளை நாம் எப்போதும் தொடர வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் 100 சதவீதம் பங்களிக்க வேண்டும். வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான ஒரே வழி இதுதான். இன்றைய இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் நம்பிக்கையளிக்கும் புதிய இந்தியா. இந்த நம்பிக்கை தொடர வேண்டும்; ஒற்றுமை உணர்வு மாறாமல் இருக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாட்டு மக்கள் அனைவர் சார்பிலும் சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்துகிறோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை தின வாழ்த்துகள்" என்றார் பிரதமர் மோடி.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பல்வேறு மாநிலக் காவல்துறையினரின் அணிவகுப்புகள் அடங்கிய தேசிய ஒற்றுமை தினம், சிஆர்பிஎஃப் வீராங்கனைகளின் இருசக்கர மோட்டார் வாகன சாகச நிகழ்ச்சி, எல்லைப் பாதுகாப்புப் படைப் பெண்களின் பைப் பேண்ட் இசை, குஜராத் மகளிர் காவல்துறையின் நடன நிகழ்ச்சி, தேசிய மாணவர் படையின் (என்சிசி) சிறப்பு நிகழ்ச்சி, பள்ளி இசைக்குழுக்கள் நிகழ்ச்சி, இந்திய விமானப்படையின் அணிவகுப்பு, துடிப்பான கிராமங்களின் பொருளாதார நம்பகத்தன்மையை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago