வெறுப்புப் பேச்சு: மத்திய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

எர்ணாகுளம்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டால் மதிப்பை இழந்துவரும் முதல்வர் பினராயி விஜயனின் இழிவான சமாதான அரசியலுக்கு ஓர் உதாரணமே களமசேரியில் நாம் கண்ட வெடிகுண்டு தாக்குதல். கேரளாவில் ஹமாஸின் ஜிஹாதிகளுக்கான வெளிப்படையான அழைப்பால் அப்பாவி கிறிஸ்துவ மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் வேளையில் முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்.

காங்கிரஸ் மற்றும் சிபிஎம்-மின் சமாதான அரசியலுக்கு அனைத்து சமூகங்களைச் சேர்ந்த அப்பாவிகளின் உயிர்களைத்தான் விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. இதனைத் தான் கடந்த கால வரலாறுகளும் நமக்கு போதிக்கிறது. களமசேரி வெடிகுண்டு விபத்தும் இண்டியா கூட்டணி சார்பில் கேரளாவில் ஜிஹாத்துக்கு அழைப்பு விடுத்து தீவிரவாதிகளான ஹமாஸை அழைத்து சமூகத்தில் வெறுப்பை பரப்பியதன் விளைவுதான். பொறுப்பற்ற இத்தகைய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது” என பதிவிட்டிருந்தார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன், “ராஜீவ் சந்திரசேகர் கொடிய விஷத்தை உமிழ்கிறார்” என குற்றம்சாட்டியிருந்தார்.

இருவருக்குமான வார்த்தை போர் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், எர்ணாகுளம் சைபர் கிரைம் காவல் துறை சார்பில், வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல், மதம், இனம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் மீது பதியப்பட்டுள்ள எப்ஐஆரில் புகார்தாரர் என எர்ணாகுளம் சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் பெயர் இடம்பெற்றுள்ளது.

களமசேரி நிகழ்வு: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்த களமசேரியில் சாம்ரா சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள்’ சபை சார்பில் 3 நாட்கள் ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதன் நிறைவு நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர். காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. சிறிது நேரத்தில், மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி டோமினிக் மார்டின் (52) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE