''போட்டி அரசியல் நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி'' - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, போட்டி அரசியல் நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அரசுத் தரப்பில் அனுப்பப்படும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விவரம் வருமாறு: "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்களை தாமதப்படுத்துவது, பரிசீலிக்கத் தவறுவது, ஒப்புதல் அளிக்கத் தவறுவது போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடுகிறார். இதன் மூலம், மாநில அரசின் நிர்வாகத்துக்கு “அரசியலமைப்பு முட்டுக்கட்டையை” ஆளுநர் உருவாக்கியுள்ளார்.

சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியல் போட்டியாக ஆளுநர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவருக்கும் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் இடையே முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. மாநில மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

“தினசரி கோப்புகள், பணி ஆணைகள், பணி நியமன ஆணைகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு தொடருவதற்கான ஒப்புதல், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உள்ளிட்டவற்றுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கும் பணியை ஆளுநர் மேற்கொள்ளாமல் உள்ளார். விரோத மனப்பான்மை காரணமாக ஆளுநர், மாநில நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காமலும், ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் எதிராக முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்படுகிறார்.

தமிழக ஆளுநரின் செயலற்ற தன்மை, புறக்கணிப்பு, தாமதம் மற்றும் இணங்கத் தவறியது ஆகிய தன்னிச்சையான செயல்கள் சட்டத்துக்குப் புறம்பானது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை பரிசீலிக்காமல் இருப்பது அதிகார துஷ்பிரயோகம் அன அறிவிக்க வேண்டும். ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் பதவி என்பது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது அல்ல. அமைச்சரவைக் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே அவர்களின் செயல் இருக்க வேண்டும். எனவே, ஆளுநர் ஆர்.என். ரவி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் அரசாங்க உத்தரவுகளை பரிசீலிக்க ஒரு காலக்கெடுவினை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்." இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE