கரோனா பாதித்தவர்கள் கடும் வேலைகளை தவிர்க்க வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.

குஜராத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய சிலர் சமீப காலமாக அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். குறிப்பாக, சவுராஷ்டிரா பகுதியில் இந்த உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 22-ம் தேதி நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் கூறும்போது, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கடுமையாக உடற்பயிற்சி மற்றும் கடினமாக வேலை செய்வதை 2 ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE