ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 9 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விஜயநகரம்: ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.

இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் அதிர்ச்சி: இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:

விஜயநகர மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நடந்த ரயில்கள் மோதல் தொடர்பான விபத்தை அறிந்ததும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகளை அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், நிவாரண உதவிகளையும் வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விசாகப்பட்டினம், அனக்காபள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ்களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீட்புப் பணி: நேற்று இரவு இந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்து அங்கு ரயில்வே போலீஸார், அதிகாரிகள், மாவட்ட போலீஸார் குவிந்துள்ளனர். மேலும் மீட்புப் பணிகளில் போலீஸாருக்கு கிராம மக்களும் உதவி செய்தனர். இரவு நேரமானாலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன.

போக்குவரத்து பாதிப்பு: ரயில்கள் மோதி 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதால் அந்த ரயில் பாதை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மார்க்கமாக செல்லும் ரயில்கள், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உடனடியாக ரயில் பாதையை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE