கொச்சி: கேரளாவின் கொச்சி அடுத்த களமசேரியில் உள்ள கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்ததில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அடுத்த களமசேரியில் சாம்ரா சர்வதேச மையம் உள்ளது. இங்கு, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவான ‘யெகோவாவின் சாட்சிகள்’ சபை சார்பில் 3 நாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 27, 28-ம் தேதிகளில் காலை முதல்மாலை வரை நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவு நாளானநேற்று 2,400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலை 9.30 மணிக்கு ஜெபக் கூட்டம் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டத்தின் மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. சிறிது நேரத்தில், கூட்டத்தின் வலது, இடதுபக்கங்களில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் லிபினா என்ற பெண், சம்பவ இடத்திலேயே உடல் கருகிஉயிரிழந்தார். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஜெபக் கூட்டம் தொடங்கியதும், மையத்தின் கதவுகள் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தன. இதனால், குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், மக்கள் எப்படி தப்பிப்பது என தெரியாமல், நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் பலர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்து, காவல் துறையினர், மீட்பு குழுவினர் விரைந்துவந்தனர். காயமடைந்தவர்கள்உடனடியாக களமசேரியில் உள்ளஅரசு மருத்துவமனை, கொச்சிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயமடைந்த 52 பேரில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில்அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமாரி (53) என்பவர் உயிரிழந்தார்.
கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப், உளவுத் துறை தலைவர் மனோஜ் ஆபிரகாம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பிறகு, டிஜிபி ஷேக் தர்வேஷ் கூறியதாவது:
களமசேரியில் ஐஇடி வகை குண்டுகள் வெடித்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களின் சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.
அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூழலில், வெறுப்புணர்வை தூண்டும்பதிவுகளை சமூக வலைதளங்களில் யாரும் வெளியிட கூடாது. அவ்வாறுஅவதூறு பதிவு வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ஐஏ, என்எஸ்ஜி ஆய்வு: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி), கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியபோது, ‘‘குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் மாநில அரசு வழங்கும். அரசு மருத்துவர்களின் விடுப்புரத்து செய்யப்பட்டு அனைவரும் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
குண்டுவெடிப்பு குறித்து கேரளபோலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
களமசேரி ஜெபக் கூட்டத்தின் மத்திய பகுதி, வலது, இடது புறங்களில் டிபன்பாக்ஸ்களில் ஐஇடிவகை குண்டுகளை மறைத்து வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
நீல நிற காரில் வந்தது யார்? குண்டுகள் வெடிப்பதற்கு முன்புசாம்ரா மையத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாக வெளியேறியது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்களுக்கு, குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். அந்த காரை தீவிரமாக தேடி வருகிறோம்.
கேரளா முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், சந்தை பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம். கொச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறோம்.
கண்ணூர் போலீஸார் நடத்தியசோதனையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைசேர்ந்த ஒருவர் பிடிபட்டார். குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டார். இவ்வாறு கேரள போலீஸார் தெரிவித்தனர்.
‘பொய்யை பரப்பியதால் தாக்குதல்’ - சரணடைந்தவர் வாக்குமூலம்: ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தார்
ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை தொடர்ந்து, கொச்சி பகுதியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் (52) என்பவர் கொடைகாரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘‘யெகோவாவின் சாட்சிகள் சபையில் கடந்த 16 ஆண்டு களாக உறுப்பினராக இருக்கிறேன். சபை உறுப்பினர்கள், மதக் கொள்கையில் இருந்து விலகிசென்ற தால், அவர்களது ஜெபக் கூட்டத்தில் குண்டு வைத்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
‘‘கொள்கை, கோட்பாடுகளில் இருந்து விலகி, சதிகார சபையாக மாறி, பொய்யை பரப்பி வருகின்றனர். இதை தடுப்பதற்காகவே குண்டுகளை வெடிக்கச் செய்தேன்’’ என்று, முன்னதாக சமூக வலைதளத்தில் நேரலை வீடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், ‘‘டோமினிக் எங்கள் சபையை சேர்ந்தவர் அல்ல. அவர் யாரென்றே தெரியாது’’ என யெகோவாவின் சாட்சிகள் சபை நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திருச்சூர் போலீஸ் அகாடமிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மார்ட்டினிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ‘‘குண்டுகளை வெடிக்கச் செய்தது டோமினிக் மார்ட்டின்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. கொச்சியில் டோம்னிக் வீட்டில் தீவிர சோதனை நடக்கிறது. அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று கேரள போலீஸார் கூறினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago